ஓட்டப்பிடாரம் வளர்ச்சிக்காக களமிறங்கும் ஒன்றிய செயலாளர் இளையராஜா:கனிமொழி எம்.பி-யிடம் மனு!

தூத்துக்குடி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள், மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அதன் செயலாளர் இளையராஜா, கனிமொழி எம்.பி-யைச் சந்தித்து தொகுதியின் வளர்ச்சி குறித்த விரிவான கோரிக்கை மனுவை அளித்தார்.

அந்த மனுவில், ஓட்டப்பிடாரம் பகுதி மக்களின் கல்வி, விவசாயம், மீன்வளம் மற்றும் தொழில் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு 13 முக்கிய திட்டங்களை இளையராஜா வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தருவைக்குளம் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு பாலம் அமைத்தல், அந்தோணியார்புரம் அருகே பெண்களுக்கான சட்டக் கல்லூரி, புதுக்கோட்டை அருகே கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கல்லூரி, மற்றும் கலைஞர் நினைவாகப் பிரம்மாண்ட உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். மேலும், தாமிரபரணி பாசனக் கால்வாய் விரிவாக்கம், விவசாய விளைபொருட்களைப் பதப்படுத்தும் குளிரூட்டப்பட்ட குடோன்கள் மற்றும் வல்லநாடு வனப்பகுதியில் வனவிலங்கு பார்வை மையம் அமைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் இளையராஜா கோரியுள்ளார்.
இக்கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி., திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களின் விருப்பங்களை உள்ளடக்கிய அறிக்கையாகத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார். ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலோடு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என அவர் உறுதி அளித்தார். தொகுதி வளர்ச்சிக்கான இந்த முக்கிய முன்னெடுப்பிற்காக ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் திமுக நிர்வாகிகளுக்குத் தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply