தூத்துக்குடி சட்டக் கல்லூரியில் மாணவிகள் அதிக அளவில் சேர்ந்து பயில்வது, தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் கனவுகளை நனவாக்குவதாகவே அமைந்துள்ளதாக கனிமொழி எம்பி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்து சட்டக் கல்லூரியில் இணைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கான “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ், “குன்றென நிமிர்ந்துநில்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்து, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டப் புத்தகங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., சட்டக் கல்லூரிகளில் மாணவிகள் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில்வதைப் பார்க்கும்போது, தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் கனவுகள் நிஜமாகிக்கொண்டிருப்பதை காண முடிகிறது என்றார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 99 சதவீதம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்பதற்குச் சேர்ந்துள்ளது ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுவதை அவர் எடுத்துரைத்தார். சட்டக் கல்லூரி மாணவர்கள் வெறும் வழக்கறிஞர்களாக மட்டும் மாறாமல், சமூகத்தை மாற்றக்கூடிய வழக்கறிஞர்களாக திகழ வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். “சட்டம் பயிலும் மாணவிகள் ‘இது போதும்’ என்று இருந்துவிடக் கூடாது. எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். நாட்டை நல்ல சிந்தனைகளுடன், எல்லோருக்குமான நியாயங்களாக மாற்றப் பாடுபட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி செய்திகள் இனி உங்கள் கைகளில்!
தூத்துக்குடியில் நடக்கும் அனைத்து முக்கியச் செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியானால், 965550896 என்ற எண்ணில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்!உங்கள் பகுதிச் செய்திகள் அல்லது நீங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்கள் இருந்தாலும், இந்த எண்ணில் எங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.