தூத்துக்குடி மாவட்டத்தில் “காவல் நிலையம் வந்த இருவர் மரணம்” என பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு – விஷம் அருந்தி வந்த இருவர் தங்களை காப்பாற்றுமாறு காவல் நிலையத்திற்கு வந்ததையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது செல்லும் வழியில் உயிரிழப்பு என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய நுழைவாயிலுக்கு ஒன்றாக வந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் தாங்கள் விஷம் அருந்தி விட்டதாகவும் தாங்கள் இருவரையும் காப்பாற்றுமாறும் கூறியுள்ளனர். இதனையடுத்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் அவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக அவர்களை காவல் நிலையம் எதிரே இருந்த ஒரு ஆட்டோ மூலம் துரிதமாக செயல்பட்டு குலசேகரன்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்லும்போது மேற்படி இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
உடனடியாக மேற்படி சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி விஷம் அருந்தி வந்தவர்கள் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் மகன் தங்கவேல்சாமி (28) மற்றும் ஒரு பெண் என்பதும் அவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பதும் அவர்கள் திருமணத்தை மீறி உறவில் இருந்து வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேற்படி இருவரும் விஷமருந்தி இன்று (20.09.2025) காலை தங்களை காப்பாற்ற வேண்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்கள் என மேற்படி சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெளிவுபடுத்தி விளக்கம் அளிக்கிறது. எனவே மேற்படி சம்பவம் குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சி “காவல் நிலையம் வந்த இருவர் மரணம்” என அதன் உண்மை தன்மையை தெரியாமல் செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவிப்பதுடன், அதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செய்தி தொடர்பான உண்மைத்தன்மை தெரியாமல் செய்தியை பரப்ப வேண்டாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.

