தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுமக்களிடையே மருத்துவ விழிப்புணர்வையும், நோய்த்தடுப்பு அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் ‘மெட்வெர்ஸ் 2025’ (MEDVERSE 2025) என்ற பிரம்மாண்ட சிறப்பு மருத்துவக் கண்காட்சியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. க.இளம்பகவத் உடன் இருந்தார்.

மக்கள் மத்தியில் மருத்துவ அறிவையும், நோய்த்தடுப்பு விழிப்புணர்வையும் உருவாக்கும் நோக்கத்தில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து துறையைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து ‘மெட்வெர்ஸ் 2025’ மருத்துவக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இந்தக் கண்காட்சி ஜூலை 5, 2025 வரை நடைபெறுகிறது.
இதில் சிறப்பம்சங்களாக மனித உடலமைப்பை விளக்கும் தெளிவான மாதிரிகள், முதலுதவி சிகிச்சைகள் அறிப்பது குறித்தும், இதய நுரையீரல் புத்துயிர் சிகிச்சை குறித்தும், அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றிய நிகழ்நேர விளக்கங்கள், துறை வாரியாக கட்டமைக்கப்பட்ட விளக்க மையங்கள், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் புதுமைகள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.
கண்காட்சியை பள்ளி மாணவர்கள் இன்று முதல் 03.07.2025 வரையும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஆர்வலர்கள் 04.07.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் பார்வையிடலாம்.

இந்த கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு தூத்துக்குடி மக்களின் மருத்துவ அறிவை மேம்படுத்துவதோடு, அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவச் சேவைகளையும் சிறப்பம்சங்களையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை எங்களுக்கு தெரிவிக்க கீழ் காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும்: 9655550896