தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் புதிய துறைமுகம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா 85வது அவதார பெருமங்கல விழா, மன்ற ஆண்டு விழா கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி மாலை அணியும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
குரு பூஜை, வினாயகர் பூஜை, முக்கோண சக்கரம், முக்கோணயாக குண்டம் 11, கலசம், 11 ஓம் சக்தி விளக்கு வைத்து இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் பேரிடர், விபத்து ஆபத்தில் இருந்து காப்பாற்றி நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்கவும், துறைமுக நலன் வேண்டியும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வியை தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கிவைத்தார். சக்தி கொடியை மன்ற செயலாளர் நயினார் ஏற்றினார்.
நூற்றுக்கணக்கான மகளிர் 108, 1008 தமிழ் மந்திரம் படித்து குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து சக்தி மாலை அணியும் விழாவை மன்ற தலைவர் கண்ணகி தொடங்கி வைத்தார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற துணைத்தலைவர் காஞ்சனா தொடங்கி வைத்தார்.
விழாவில், வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ண நீலா, திருவிக நகர் சக்திபீட வேள்விக்குழு பத்மாவதி, மகளிர் அணி பரமேஸ்வரி, ப்ரியா, இளைஞர் அணி முத்துக்குமார், தனபால், மணி, பூல்பாண்டி, துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
