இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்,மதச்சார்பற்ற திமுக கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் அதிமுகவும், பாஜகவும் சதி செய்து வருகின்றனர். இந்த சதிகளை முறியடித்து மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதால், தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மையான மாநிலமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், மதச்சார்பற்ற திமுக கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் அதிமுகவும், பாஜகவும் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். எனவே, வரும் தேர்தல்களில் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஒரு வாக்கு கூட சிதறாமல் தங்களது கூட்டணிக்குக் கிடைத்திட உழைக்க வேண்டும் என்றும், மீண்டும் திமுக ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

