தூத்துக்குடி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள், திமுகவின் கொள்கை மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தனர்.
எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த இளைஞர்களுக்குக் கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து வரவேற்ற அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். இளைஞர்களைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு மிக முக்கியமானது; இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்கவும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகவும் இளைஞர்களின் பங்கு மிக அவசியம். உங்கள் பகுதியில் அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்த்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.”
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் மாவட்ட, மாநகர அணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

