Site icon thoothukudipeople.com

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் இடமாற்றம் : பக்தர்கள் வரவேற்பு

Reporter:praveen,thoothukudi

நெல்லை சரக டிஐஜி மூா்த்தி உத்தரவின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் பக்தா்களின் வசதிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவிழா காலங்களில் இங்கு பல லட்சம் போ் வருகின்றனா். மேலும், நீதியரசா்கள், மத்திய-மாநில அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசியல் பிரமுகா்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அடிக்கடி வருவதால் கோயிலில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.

கடலில் நீராடும் பக்தா்களைப் பாதுகாக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் கோயில் முன் கடற்கரை வாசல் அருகே புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. மேலும், திருச்செந்தூரில் கோயில் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் உள்ளன.

இவற்றில், கோயில் காவல் நிலையம் டி.பி. சாலையில் தினசரிச் சந்தை பகுதியில் செயல்பட்டுவந்தது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் புகாா் கொடுக்க நீண்ட தொலைவு செல்லவேண்டியிருந்ததால் சிரமத்துக்குள்ளாகினா். ஏதேனும் இக்கட்டான சூழல் ஏற்பட்டால் போலீஸாா் கோயிலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால், கோவில் காவல் நிலையத்தை தாலுகா அலுவலகம் எதிரேயுள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு இடம் மாற்றம் செய்யுமாறு நெல்லை சரக டிஐஜி மூா்த்தி உத்தரவிட்டாா். அதன்பேரிலும், மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் அறிவுறுத்தலின்பேரிலும், இக்காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய காவல் நிலையத்தில் ஆய்வாளா் கனகராஜன், எஸ்.ஐ.க்கள், காவலா்கள் தங்களது பணியைத் தொடங்கினா். கோயிலிலிருந்து நடந்து செல்லும் தொலைவுக்கு காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை பக்தா்கள் வரவேற்றுள்ளனா்.

Exit mobile version