Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி சவேரியார் பள்ளி முன்னாள் மாணவர் இயக்கத்தின் 102-வது ஆண்டு விழா!

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்கத்தின் 102வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முன்னாள் மாணவர்களுக்குப் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்டு விழா நாளில் காலையில் நெகிழி ஒழிப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட 5 மைல் ஒட்டப் பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி வளாகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியென இரு வகையான பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 320 குழந்தைகள் பங்குபெற்றனர். மாலையில் அனைவருக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் அதிபரும் முன்னாள் மாணவர் இயக்கத்தின் இயக்குநருமான மரிய சிங்கராயர் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். செயலாளர் ராஜசேகரன் ஆண்டறிக்கையைப் படித்தார். பொருளாளர் முகம்மது ஹயாஸ் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவரும் சுங்கத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சேதுராஜ், முன்னாள் மாணவரும் சென்னை மகா பெரியவா இம்பெக்ஸ் நிறுவனத்தின் நிறுவருமான சுந்தர் ஆகியோா் தங்களின் பள்ளிப் பருவத்தை நினைவுகூர்ந்து தாங்கள் வாழ்க்கையில் உயர்வதற்கு இந்தப் பள்ளியே காரணம் என்று குறிப்பிட்டனர். சென்னையில் இருந்து வந்த தொழிலதிபர் சுந்தர் பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவ இயக்கத்தின் வழியாக ரூபாய் ஓர் இலட்சத்தைப் பள்ளியின் அதிபர்தந்தை மரிய சிங்கராயரிடம் வழங்கினார்.
இயக்கத்தின் முன்னாள் தலைவர் நினைவில் வாழும் விவிடி ரவீந்திரன் நினைவு சுழற்கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் மாணவர் பிரிவில் முதலிடம் பிடித்த விகாசா பள்ளிக்கும், இரண்டாமிடம் பெற்ற விகாசா சைனிக் பள்ளிக்கும், மாணவியர் பிரிவில் முதலிடம் பிடித்த சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளிக்கும், இரண்டாமிடம் பிடித்த ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் பள்ளிக்கும் சுழற்கோப்பையும் பரிசும் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவர் இயக்க நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பள்ளி ஆசிரியர்களின் சவேரியன்ஸ் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்்ச்சியை இணைச் செயலாளர் தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் தீரமகாராஜன் நன்றியுரை கூறினார்.

Exit mobile version