Site icon thoothukudipeople.com

பணம் கேட்டால் கொலை மிரட்டல்! – ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ உறவினர் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்

தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக 10 லட்ச ரூபாய் மோசடி, அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு தெருவை சேர்ந்த சரோஜா விவசாயம் செய்து வருகிறார். பனிரெண்டாம் வகுப்பு படித்துள்ள சரோஜாவுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் பிரதீப்  என்பவர் அறிமுமாகியுள்ளார். அவர் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ தனது உறவினர் என்றும் பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார் .

தொடர்ந்து அரசு வேலைக்காக சரோஜாவிடம் இருந்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு பிரதீப் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். பிரதீப்பின் பேச்சை நம்பிய சரோஜா, தனது நகைகளை அடகு வைத்தும், கணவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தையும் சேர்த்து ரூ.10 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஒரு மாதத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், இல்லையெனில் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் பிரதீப் உறுதி அளித்ததோடு, நம்பிக்கைக்காக ஒரு காசோலையையும் கொடுத்திருக்கிறார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை கிடைக்காததால், சரோஜா பணத்தைத் திருப்பித் தருமாறு பிரதீப்பிடம் கேட்டபோது, “உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், “என் அக்கா கணவர் கண்ணன் மூன்று கொலைகள் செய்த பெரிய ரவுடி, பணத்தைத் திருப்பிக் கேட்டால் உன்னையும் கொலை செய்துவிடுவோம்” என பிரதீப் கொலை மிரட்டல் விடுத்ததாக சரோஜா குற்றம் சாட்டியுள்ளார். இதேபோன்று, சரோஜாவின் கணவரிடமும் வீட்டை விற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் அவர் புகார் அளித்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சரோஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version