தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்’ எனப் போற்றப்படும் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா இன்று, கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி வ.உ.சி சந்தை அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.