Site icon thoothukudipeople.com

“ஓடும் ரயிலில் இருந்து தள்ளி தூத்துக்குடி தொழிலாளி கொலை – 7 பேர் கைது!”

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும்போது கும்பல் தாக்குதலுக்கு ஆளாகி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், சம்பவத்தன்று வழக்கம்போல மாலை 4.05 மணிக்கு பாலக்காட்டிலிருந்து புறப்பட்டு, அதிகாலையில் புனலூர் ரயில் நிலையம் அருகே வந்தது.

அப்போது, பொதுப்பெட்டியில் பயணம் செய்த தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 46) என்பவருக்கும், அதே பெட்டியில் பயணித்த தென்காசியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் செந்தில்குமாரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக தகவல் அறிந்த ரயில்வே போலீசார், புனலூர் ரயில் நிலையம் அருகே சென்று உடலை மீட்டு, புனலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இச்சம்பவத்தை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பயணிகளிடம் விசாரணை நடைபெற்றது. அதில், 7 பயணிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில்குமார் கேரளாவின் செங்கனூர் பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வந்தவர். விடுமுறைக்காக தனது ஊரான தூத்துக்குடிக்கு வருகை தந்த போது,இந்த சம்பவம் நிகழ்ந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version