தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் ஜுன் மாதம் முதல் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் விவாதத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது: 2022 செப்டம்பரில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் தற்போது 34,987 பள்ளிகளில் நடைமுறையில் இருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் தினமும் இலவச காலை உணவைப் பெறுகின்றனர்.
வரும் ஜூன் மாதம் முதல், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் மற்றும் சாம்பார் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்தார். இது மாணவர்களின் சுகாதாரத்தையும், சுவையையும் மேலும் மேம்படுத்தும் முயற்சியாகும்.
மேலும், புதிய கல்வியாண்டில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் பெறும். அதேபோல், ஓசூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் புதிய மகளிர் தோழி விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை பயன்பாட்டிற்கு வர உள்ளன.
மேலும், “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் ₹721 கோடி மாணவிகளின் உயர்கல்விக்காக அரசால் செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.