தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள், தீபாவளி போனஸ் பிடித்தம் செய்ததைக் குறைக்க வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் இவர்களுக்கு, கூடுதல் ஊதியம் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், நீண்ட நாட்களாகியும் கூடுதல் ஊதியம் வழங்கப்படாத நிலையில், தீபாவளிக்கு வழங்கப்பட்ட ₹2000 முன்பணத்தை மாதந்தோறும் ₹200 வீதம் 10 தவணைகளில் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாறாக, எந்த முன் அறிவிப்பும் இன்றி இந்த மாத சம்பளத்தில் இருந்து ₹1000 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு விதிக்கப்பட்ட ₹25 லட்சம் அபராதத்தை ஈடுகட்டவே பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து ₹1,500 பிடித்தம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்த அநியாயப் பிடித்தத்தைக் குறைத்து, நிலுவையில் உள்ள கூடுதல் ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தூத்துக்குடி மாநகரத்தின் முக்கியப் பகுதிகளில் தூய்மைப் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பினர்.

