Site icon thoothukudipeople.com

காதல் விவகாரம்: நெல்லையில் மென்பொருள் ஊழியர் அரிவாளால் வெட்டிக் கொலை!

Oplus_131072

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சாதி மறுப்பு காதல் விவகாரம் காரணமாக பாளையங்கோட்டையில் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் – செல்வி தம்பதியின் மகன் கவின் (24), சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் பள்ளிப் பருவத்தில் தன்னுடன் படித்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இளம்பெண், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இளம்பெண்ணின் பெற்றோர், சண்முகராஜன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மணிமுத்தாறு காவல்நிலையம் ஒன்றாம் பட்டாலியனில் துணை ஆய்வாளர்களாகப் பணிபுரிகின்றனர். கவின் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு இவர்களின் பழக்கம் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனாலும், தனது பள்ளித் தோழியுடனான நட்பின் காரணமாக, கவின் தனது குடும்பத்தில் யாருக்கு உடல்நலக் குறைவு என்றாலும், அந்த சித்த மருத்துவ மையத்திற்கே வந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று பகலில், கவின் தனது பள்ளித் தோழியைப் பார்ப்பதற்காக மருத்துவ மையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இளம்பெண்ணின் சகோதரரான சுர்ஜித், கவினைப் பேச வேண்டும் என்று கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி நகர் 1வது தெருவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, கவினை ஓட ஓட விரட்டி, அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு எதிரில், அரிவாளால் அவரது முதுகு, முகம், தலை போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பின்னர், சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொடூரக் கொலை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


உங்களிடம் செய்தி இருக்கிறதா? எங்களிடம் சொல்லுங்கள்!

உங்கள் பகுதியில் நடந்த சம்பவங்கள், சமூகப் பிரச்சினைகள், அல்லது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான தகவல்கள் என எதுவாக இருந்தாலும், எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அனைத்துத் தரப்பு மக்களின் குரலையும் எங்கள் ஆன்லைன் இதழ் மூலம் கொண்டு சேர்க்க நாங்கள் காத்திருக்கிறோம்.

செய்திகளைப் பகிர அல்லது தகவல்களைத் தெரிவிக்க, எங்கள் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்:

ஆசிரியர்: பா. செந்தில் குமார் தொடர்புக்கு: 9655550896,0461-7960026.

Exit mobile version