Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி: செபஸ்தியார் கெபி திருவிழா-பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார் பங்குத்தந்தை ஸ்டார்வின்!

தூத்துக்குடி மறக்குடி தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செபஸ்தியார் கெபி திருவிழாவை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, செபஸ்தியார் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு, குரூஸ்பர்னாந்து நற்பணி மன்றத் தலைவர் ஹெர்மன் கில்ட் தலைமை தாங்கினார். செயலாளர் சசி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராகப் பனிமய மாதா பேராலயப் பங்குத்தந்தை ஸ்டார்வின் கலந்துகொண்டார். அவர் உலக நன்மைக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்து விழாவைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 7 பெண்களுக்குத் தையல் இயந்திரங்களை வழங்கினார். மேலும், விழாவில் கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமாக வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியைச் சேர்ந்த வர்கீஸ், பிராங்கிளின், தினேஷ், கிராசிங்டன் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த வெர்ஜின், விஜிலியா, ஜெசிந்தா உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாகக் குருஸ்பர்னாந்து நற்பணி மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன் நன்றி கூறினார்.

Exit mobile version