தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் பொங்கல் கொண்டாடுவதாக விமர்சித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி.யின் கருத்துகளுக்கு, தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் சார்பில் கடும் கண்டனத்துடன் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில்;-“பொங்கல் என்பது அரசியல் நாடகமல்ல; அது தமிழர்களின் உயிரோடு கலந்த பாரம்பரிய விழா. பாரதிய ஜனதா கட்சி தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் விவசாயிகளின் உழைப்பை மதித்து, பாரம்பரிய விழாக்களை கொண்டாடி வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’, பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக பயன் அளித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் நெல் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிர்வாகமும், மக்களவை உறுப்பினரும் இதுவரை எந்தத் தீர்வு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
மேலும், விவசாயிகளிடமிருந்து அரசு நெல் கொள்முதல் சரிவர நடைபெறாமல், கொள்முதல் மையங்களில் காலதாமதம், எடை குறைவு, பணம் வழங்குவதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. இதன் காரணமாக விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு விளைச்சலை விற்கத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனுடன் உரத் தட்டுப்பாடு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிலவி, விவசாய பணிகள் முடங்கியுள்ளன. இத்தகைய அடிப்படை விவசாய பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள், பிரதமர் நாடகம் ஆடுவதாக அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டு முன்வைப்பது வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்;-விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நீதி குறித்து பேசும் கனிமொழி அவர்களே உங்கள் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளதையும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி போதிய அளவில் இல்லை என்பதையும் தம்மிடம் உள்ள நிர்வாகப் பொறுப்பை உணர்ந்து பரிசீலிக்க வேண்டும் என சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் மொழி, தமிழ் பண்பாடு குறித்து பேசும் கனிமொழி அவர்கள் மத்திய அரசு தமிழுக்கு வழங்கி வரும் நிதி, செம்மொழித் தமிழ் வளர்ச்சி,உலக அளவில் தமிழை எடுத்துச் செல்லும் முயற்சிகள் குறித்து மௌனம் காக்கிறார். பாரதிய ஜனதா கட்சி தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதியாக செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் லாபத்திற்காக கூறப்பட்டவை என்றும், உண்மை நிலவரத்திற்கு முற்றிலும் மாறானவை என்றும் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தெரிவித்தார்.

