Site icon thoothukudipeople.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்!

தூத்துக்குடி,டிசம்பர்-12-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட “தங்க மகன் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்” சார்பில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில்,ரசிகர்கள் ஒன்றுதிரண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு, பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் அன்பளிப்பாகப் பரிசுப் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினர்.மேலும், ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ வேண்டி, சிவன் கோவில், மசூதி, மாதா கோவில் ஆகிய மூன்று ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்தச் சிறப்பான நிகழ்வுகளில், ரசிகர் மன்றத்தின் முக்கியப் பொறுப்பாளர்களான துரைராஜ், வேல்முருகன், சூர்யா மற்றும் மாவட்ட சட்ட ஆலோசகர்கள் ரமேஷ் பாண்டியன், அருணா தேவி, தனம், பூங்கொடி, டிட்டோ, சந்துரு உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Exit mobile version