திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நேற்று 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ. 18.96 இலட்சம் ரொக்கம் காணிக்கையாகக் கிடைத்துள்ளது. ஆனிப் பெருந்திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்தக் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்லையா மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுப்புலட்சுமி கண்காணிப்பு அதிகாரியாகச் செயல்பட்டார். திருநெல்வேலி மேற்குப் பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி (வள்ளி), மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் சொக்கலிங்கம், ரவி உள்ளிட்டோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.18.96 லட்சம் ரொக்கம், 28.2 கிராம் எடையுள்ள தங்கம், 284 கிராம் எடையுள்ள வெள்ளி, கிடைக்கப் பெற்றன. மேலும், 17 வெளிநாட்டுப் பணத்தாள்கள் கிடைக்கப் பெற் றதாக திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. இக்கோயிலில் கடந்த மார்ச் 20-ம் தேதி கடைசி யாக உண்டியல்கள் திறக்கபட்டு காணிக்கைகள் எண்ணபட்டிருந்தன.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் இசக்கியப்பன், கண்காணிப்பாளர் முருகன், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.